Monday, 18 August 2014

திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி


திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி விளையாட்டு துறையில், ஒவ்வொரு மாணவரின் விடா முயற்சியும், தன்னம்பிக்கையுமே, லட்சிய பாதையை நோக்கிய பயணத்துக்கு வழிவகுக்கும். ஒரு போட்டியில், வெற்றி பெறுவது என்பது எளிதான ஒன்று. ஆனால், அந்த திறனை தக்கவைத்து கொள்வதே முழுமையான வெற்றி என, தடகள வீராங்கனை ஸ்மிதா கூறுகிறார். இவர், அதிவிரைவுப்படை பெண்கள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தடகள வீரங்கனையான ஸ்மிதா, 36, கேரள மாநிலத்தை சேர்ந்தவர். லட்சியத்தை அடைவதற்கான முயற்சியை தனது, 10 வயதிலிருந்து மேற்கொண்டார். வாழ்க்கை பயணத்தில், முதலில் 100, 200 மீட்டரில் துவங்கி, படிப்படியாக தனது விடா பயிற்சியின் மூலம், ஆரம்பகாலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார். முதலில், பள்ளிகளுக்கிடையேயான தடகளம், மாவட்டம், மாநில அளவில், 100 மீட்டரில் கலந்து சான்றிதழ்களும், பரிசும் வென்றுள்ளார். அடுத்தடுத்து, அகில இந்திய போலீஸ் தடகள போட்டிகளில் கலந்து தங்கம் வென்றார். கல்லுாரி படிப்பை முடித்த பின், 1998ல் அதிவிரைவு படையில் சேர்ந்தார். 2003ல் அகில இந்திய போலீஸ் தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 2004ல் நடந்த போட்டியில், 3வது இடமும் பிடித்துள்ளார். 2008ல், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில், 100, 200, 400, 1500 மீ., ஓட்டங்களில், 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இப்படி பல பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று வந்த இவர், தற்போது கோவையில் நடந்த அதிவிரைவு படை வீரர்களுக்காக தடகள போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தையும் பெற்று, வெற்றி கொடி நாட்டியுள்ளார். தடகள வீராங்கனை ஸ்மிதா கூறுகையில், "விளையாட்டை பொறுத்த வரையில், பயிற்சிக்கு விளையாட்டு மைதானம்தான் வேண்டும் என இல்லை. வீட்டு தெருக்கள்தான் ஓட்டப் பந்தயத்திற்கான முதல் அடித்தளம், நாள்தோறும் செய்யும் செயல்களில்தான், ஆரம்பகால பயிற்சி அமைகிறது. அதன்பின் எடுக்கும் முறையான பயிற்சியும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு வழிவகுக்கும். வெற்றி பெறுவது எளிது; வெற்றியை தக்க வைத்து கொள்வதே முழுமையான வெற்றி" என்றார்.

No comments:

Post a Comment